செய்திகள்
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சிவகாசியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு

Published On 2020-10-17 09:12 GMT   |   Update On 2020-10-17 09:12 GMT
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகாசி:

தொழில்நகரமான சிவகாசியில் கடந்த காலங்களை விட தற்போது பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சிவகாசி நகராட்சி அதிகாரிகள் தற்போது அதை பற்றி கண்டுக்கொள்வதில்லை.

இதனால் நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், துணிக்கடைகள், பூக்கடைகள், மளிகை கடைகள் உள்பட பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நிலையில் கடைக்காரர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து நகரம் முழுவதும் விற்பனை செய்கிறார்கள்.

சிவகாசி நகராட்சி பகுதியில் மட்டும் இன்றி ஊராட்சி பகுதியில் உள்ள கடைகளிலும் தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட டீ கப்புகள் சிவகாசியில் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தும் நகராட்சி அதிகாரிகள் இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து பயன்படுத்தி வந்த நிலை மாறி தற்போது வெளியூர்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை அனுப்பி வைக்கும் மிக மோசமான நிலைக்கு சிவகாசி தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகாசி நகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்து 1 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நகர வளர்ச்சியின் மீது அதிக அக்கறை கொண்டு நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தற்போது நகரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. சிவகாசி பகுதியில் உள்ள அனைத்து வாருகால்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் செல்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் இனிவரும் காலங்களில் நகரம் சிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பொருட்களை உடனே தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News