செய்திகள்
குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-03-02 16:21 GMT   |   Update On 2021-03-02 16:21 GMT
புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி காந்திநகர், உசிலங்குளம், அய்யனார்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் குடிநீர் வசதி கோரி நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்திருந்தனர். சாக்கடை கலந்த கழிவு நீரை சிலர் குடங்களில் பிடித்திருந்தனர்.

இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ் நகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதற்கிடையில் நகராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லை எனவும், பாதாள சாக்கடை பணி நிறைவு பெறவில்லை எனவும் ஒருவர் பதாகையை தனது ஸ்கூட்டரில் முன்னும், பின்னும் தொங்கவிட்டுள்ளார். அவர் அந்த பதாகையுடன் ஸ்கூட்டரில் நகரப்பகுதியில் வலம் வந்தப்படி உள்ளார்.
Tags:    

Similar News