ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் திரளான பக்தர்கள் முன்னிலையில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். (உள்படம் சுவாமி-அம்பாள்)

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம்

Published On 2021-01-29 05:50 GMT   |   Update On 2021-01-29 05:50 GMT
நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், சொல்லரங்கம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.

விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதற்காக நாகராஜா கோவிலில் இருந்து சுவாமி அனந்தகிரு‌‌ஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழுத்தலைவர் சிவகுற்றாலம், இணை ஆணையர் அன்புமணி, பா.ஜனதா மூத்த உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தி.மு.க. மாநகர செயலாளர் மகே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.

தேரானது 4 ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின் போது ஏராளமான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் நின்றபடி மலர்களை தூவி வரவேற்றனர். ரத வீதிகள் நெடுகிலும் பக்தர்கள் வீடுகள் மற்றும் கடைகளின் முன் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட விழாவுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பக்தர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தில் தேருக்கு பின்னால் ஒரு யானை வரும். தேரின் சக்கரம் பின்னோக்கி சென்றுவிட கூடாது என்பதற்காக அந்த யானை தடியை சுமந்து வந்து தேர் நிற்கும்போதெல்லாம் தடியை சக்கரத்தின் பின்னால் போடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக யானை பயன்படுத்தப்படவில்லை. மாறாக தடி தூக்கும் பணியை பக்தர்களே செய்தனர்.

இதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மண்டகப்படி, 8.15 மணிக்கு கச்சேரி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடந்தன.

விழாவின் இறுதி நாள் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, அதன் பிறகு இன்னிசை சொல்லரங்கம், இரவு 7.45 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கோவிலுக்கு எழுந்தருளல், 8.15 மணிக்கு பக்தி மெல்லிசை நடக்கிறது. பின்னர் இரவு 9.30 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக தேரோட்டத்தையொட்டி ரத வீதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரத வீதிகளில் வேறு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
Tags:    

Similar News