செய்திகள்
வெற்றியை கொண்டாடும் திமுகவினர்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

Published On 2019-08-09 10:03 GMT   |   Update On 2019-08-09 11:17 GMT
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது. 

11.30 மணிக்கு பிறகு கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். படிப்படியாக அவரது வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியது. 

மதியம் 1.30 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 11 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 226 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 25 ஆயிரத்து 953 வாக்குகளும் பெற்றிருந்தனர். 

அதன்பின்னர் ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் சற்று அதிகரித்தது. எனினும் கதிர் ஆனந்தின் வாக்கு சதவீதம் மேலும் அதிகரித்ததால் அவரது வெற்றி உறுதியானது.

மாலை 3.30 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
Tags:    

Similar News