செய்திகள்
கைது

திண்டுகல்லில் பழிக்குப்பழியாக நடந்த பெண் கொலையில் 3 பேர் கைது

Published On 2021-09-24 08:29 GMT   |   Update On 2021-09-24 08:29 GMT
திண்டுக்கல் அருகே பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்த நிர்மலாதேவி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகில் உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் நிர்மலாதேவி(65). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவரான பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் 5-வது குற்றவாளியாவார். இவர் நேற்று முன்தினம் இ.பி.காலனியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது தலையையும் துண்டித்து எடுத்து சென்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போலீசாருக்கு முக்கிய தடயமாக அமைந்தது. இதன்மூலம் கொலையாளிகளில் ஒருவர் செம்பட்டியை அடுத்துள்ள சீவல்சரகு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் மற்றொருவர் அதேபகுதியை சேர்ந்த சங்கிலிகருப்பு என்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

கொலையாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய செம்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த அய்யனார்(21), தேவேந்திரகுல வேளாளார் கூட்டமைப்பின் தென்மண்டல செயலளரான திண்டுக்கல் கரட்டழகன்பட்டியை சேர்ந்த நடராஜன்(45), சீவல்சரகை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 3 பேரையும் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவரான பூபாலன் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் நிர்மலாதேவியை கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிஓடியது தெரியவந்தது. நடராஜன் மற்றும் அய்யனார் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக போலீசார் சல்லடைபோட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். தமிழ்ச்செல்வன் மற்றும் சங்கிலிகருப்பு ஆகிய 2 பேரும் புதுக்கோட்டையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே சனி மற்றும் ஞாயிறு கோர்ட்டு விடுமுறை என்பதால் அவர்கள் இன்று கோர்ட்டில் சரணடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Tags:    

Similar News