செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினியின் இமயமலை பயணம் - அரசியல் பற்றி முக்கிய முடிவு எடுக்கிறார்

Published On 2019-10-14 05:47 GMT   |   Update On 2019-10-14 05:57 GMT
நீண்ட வருடங்களுக்கு பிறகு இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் அரசியல் குறித்து முடிவுகளை எடுப்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

25 ஆண்டு கால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார்.  

ராகாவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

ரஜினி இமயமலைக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் ரஜினி. அப்போது, மருத்துவர்களின் அறிவுரைப்படி, இமயமலை பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார்.

‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பின்போது டார்ஜிலிங் பகுதிகளில் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டுவந்தார்.

ஆனால், தன்னுடைய பிரத்யேக இடங்களான பாபா குகை உள்ளிட்ட இடங்களுக்கு உடல்நிலை காரணமாக பயணம் செய்வதை தவிர்த்துவந்தார். தற்போது, சிவா படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் கால அவகாசம் இருப்பதை அடுத்து, நீண்ட வருடங்களுக்கு பிறகு இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.   

ஆன்மீக அரசியல் செய்வதாக சொல்லி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அதில் அரசியலை கைவிட்டு விட்டு வெறும் ஆன்மீகத்தை மட்டும் தற்போது கையில் எடுத்துள்ளார்.

நேற்று இமயமலை சென்றுள்ள அவர் 2 வாரம் கழித்து தான் தமிழகம் வருவார் என்கிறார்கள். இமயமலையில் அவர் 10 நாட்கள் தொடர்ச்சியாக தியானம் இருக்க போகிறார். பல்வேறு வி‌ஷயங்களை மனதில் வைத்து அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

அரசியல் குறித்து முடிவுகளை எடுப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள்.

இது பற்றி ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:-

‘பொதுவாக ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எல்லாம் இமயமலைக்கு சென்று விட்டு பின்தான் எடுப்பார். அதேபோல்தான் அரசியல் குறித்தும் முடிவு எடுக்க உள்ளார்.

அரசியலுக்கு வருவாரா? இல்லை மக்களுக்கு விருப்பமான சினிமாவிலேயே இருப்பாரா? என்பதை அவரின் இந்த பயணம் தீர்மானிக்கும். மனரீதியாக பல வி‌ஷயங்களில் அவர் அரசியலுக்கு தயாராக வில்லை என்று தெரிகிறது. அதேபோல் தொடர் உழைப்பு காரணமாக அவர் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார். அமைதியை விரும்பி அவர் இந்த பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

இமயமலை அவருக்கு புது தெளிவை கொடுக்க போகிறது. தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் தமிழகம் திரும்ப உள்ளார். அப்போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். அது பலருக்கு அதிர்ச்சி அளிக்கலாம்’ என்று கூறுகிறார்கள்.

ரஜினி நேற்று காலை 6.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து கார் மூலம் இமயமலை பகுதிகளுக்கு செல்கிறார். 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் கேதர்நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளார்.

வழக்கமாக இந்த பகுதிகளை நடந்து சென்றே தரிசிக்கும் ரஜினி இந்த முறை ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்வார் என்கிறார்கள். இமயமலை பயணம் முடிந்த பிறகு தர்பார் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News