செய்திகள்
சோத்துப்பாறை அணை

2 ஆண்டுகளுக்கு பிறகு சோத்துப்பாறை அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-05-04 06:29 GMT   |   Update On 2021-05-04 06:29 GMT
கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று நம்புவதுடன் விவசாய பணிகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள சோத்துப்பாறை அணையானது கடந்த 3 ஆண்டுகளாக கோடை காலத்தில் நீர்மட்டம் குறைந்துகொண்டே குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்து வந்தது. மேலும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.

கடந்த 2 நாட்களாக அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை நெருங்கி வந்த நிலையில் நேற்று 124 அடியை எட்டவே முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை அணையின் மொத்த உயரமான 126.28 அடியை எட்டியது. எனவே அணைக்கு வரும் 35 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.



தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக வராக நதியில் இந்த தண்ணீர் செல்லும் என்பதால் அதன் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பருவமழை காலங்களில் மட்டுமே சோத்துப்பாறை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில் கோடை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று நம்புவதுடன் விவசாய பணிகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News