செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைத்த கூலி தொழிலாளி கைது

Published On 2021-03-08 05:36 GMT   |   Update On 2021-03-08 05:36 GMT
பெரியார் சிலை எரிந்து நாசமானதற்கு காரணம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியான முருகவேல் என்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது.

இந்த சமத்துவபுரம் வளாகத்தில் மார்பளவு பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் டயரை கொழுத்தி, பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளதாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் மாவட்ட திக சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காட்டி நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மகாராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், பெரியார் சிலை எரிந்து நாசமானதற்கு காரணம் அதே சமத்துவபுரத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியான முருகவேல் (வயது38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசில் முருகவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் அதிகாலை குளிர்காய பெரியார் சிலை அருகில் டயரை கொளுத்தினேன். அது எரிந்ததில், பெரியார் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காய்ந்து போன பூமாலையில் தீ பற்றிக் கொண்டது. இதனால் சிலை சேதம் அடைந்தது. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் அங்கிருந்து நானும் எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். பின்னர், அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் நானும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது போலீசாரிடம், அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிலைக்கு தீ வைத்துவிட்டு தப்பியதை நான் பார்த்தேன் என கூறினேன்.

பின்னர், என்னை தனியாக அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உண்மையை நான் ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News