தொழில்நுட்பம்
ஏர்டெல்

பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் ஏர்டெல்

Published On 2019-12-06 09:43 GMT   |   Update On 2019-12-06 09:43 GMT
டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.



செல்போன் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான ஏர்டெல் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் விற்பனை மூலம் 300 கோடி டாலர்கள் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் 2019 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.23,044 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.119 கோடி லாபம் ஈட்டி இருந்தது. இந்நிலையில் இந்நிறுவனம் பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் 300 கோடி டாலர் திரட்ட தயாராகி உள்ளது.



பெரும் இழப்பு ஏற்பட்டதை தொடர்து ஏர்டெல் நிறுவனம் தனது சேவை கட்டணங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து, சில தினங்களுக்கு முன் புதிய விலை பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஏர்டெல் தனது சேவை கட்டணங்களின் விலையை 40 சதவீதம் வரை உயர்த்தியது.

ஏர்டெல் மட்டுமின்றி வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களும் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தி புதிய விலை பட்டியலை வெளியிட்டன.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பார்தி ஏர்டெல் பங்கு ரூ.464.20-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.445.05-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.447.20-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.96 சதவீத சரிவாகும்.
Tags:    

Similar News