ஆன்மிகம்
ஓணம் பண்டிகையின் சிறப்புகள்

ஓணம் பண்டிகையின் சிறப்புகள்

Published On 2020-08-30 04:30 GMT   |   Update On 2020-08-28 08:52 GMT
கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது ‘ஓணம்’ பண்டிகையாகும். இந்த ஓணம் பண்டிகையின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது ‘ஓணம்’ பண்டிகையாகும். தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரளத்தில் சிங்கம் (ஆவணி) மாதம்தான் முதல் மாதமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையை புத்தாண்டு கொண்டாட்டமாகவும் சிறப்பிக்கின்றனர். பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை, கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபடுகின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் ‘அறுவடைத் திருநாளா’கவே கொண் டாடப்பட்டு வந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த ஓணம் பண்டிகையின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சக்கரவர்த்தியான எலி

சிவன் கோவில் ஒன்றில் இருந்த தீபம் அணையும் நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த எலியானது, அந்த விளக்கின் மீது ஏறி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது எலியின் வால், விளக்குத் திரியின் மீது பட்டு திரி தூண்டப்பட்டது. இதனால் அந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் செய்த இந்த நற்காரியத்திற்காக, அந்த எலியை அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க சிவபெருமான் அருள்புரிந்தார். அவரே மகாபலி சக்கரவர்த்தி என்று புராணங்கள் சொல்கின்றன.

அத்தப்பூக் கோலம்

ஓணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும்.

ஓணம் சத்யா

‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓண சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெற்றிருக்கும். வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடுவக்களி

மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தை குறிக்கும். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம், ஓணம் பண்டிகையின் 4-ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

இது தவிர கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனம் என 10 நாட்களும் பல போட்டிகள் நடத்தப்படும். இதில் படகுப்போட்டியின் போது அனைவரும் மலையாள பாடலை பாடியபடி துடுப்பை செலுத்துவார்கள்.

யானைக்கு சிறப்பு

கேரள விழாக்களில் யானைகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் ஓணம் திருவிழாவிலும் ‘யானைத் திருவிழா’ நடத்தப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவில், கடைசி நாள் அன்று விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன கவசங்களாலும், பூ தோரணங்களாலும் யானைகளை அலங்கரித்து, வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வருவார்கள். இந்த விழாவில் யானைகளுக்கு சிறப்பு உணவும் வழங்கப்படும்.
Tags:    

Similar News