ஆன்மிகம்
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தபோது எடுத்தபடம்.

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை மாடவீதிகளில் நடக்காது

Published On 2020-08-29 06:45 GMT   |   Update On 2020-08-29 06:45 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவவிழா வாகன சேவை நான்கு மாடவீதிகளில் நடக்காது என அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவவிழா வாகன சேவை நான்கு மாடவீதிகளில் நடக்காது என அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவவிழா நடக்கிறது. கொரோனா பரவலால் விழாவில் பங்கேற்று, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. அதேபோல் காலை, மாலை வாகன சேவை நான்கு மாடவீதிகளில் நடக்காது. கோவில் உள்ளேயே வாகன சேவை நடக்கிறது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.

அதேபோல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவவிழா இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்சவவிழாவிலும் வாகன சேவை நான்கு மாடவீதிகளில் நடக்காது. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருமானத்தை உயர்த்த காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தை வங்கிகளில் அதிக ஆண்டுகள் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்காக ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

திருப்பதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் 3-வது மாடி கட்டிடம் ரூ.5 கோடியே 40 லட்சத்தில் 50 அறைகளுடன் கட்டப்பட உள்ளது. அந்தப் பணி முடிந்ததும், அதன் அருகில் குழந்தைகளுக்கான மருத்துவமனை புதிதாக கட்டப்பட உள்ளது.

திருப்பதியில் இன்று முதல் (சனிக்கிழமை) இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படுகிறது. அத்துடன் டைம் ஸ்லாட் டோக்கன் ஆன்லைன் மூலமும் வழங்கப்படும். கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உதய அஸ்தமன சேவைக்கு முன்பதிவு செய்வோருக்கு வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலர் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குரிய மருத்துவ செலவின தொகையை ஆந்திர மாநில அரசு உத்தரவுபடி தேவஸ்தானம் ஏற்க உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News