ஆட்டோமொபைல்
பைக் டாக்சி

தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி

Published On 2019-10-03 07:57 GMT   |   Update On 2019-10-03 07:57 GMT
தமிழ் நாட்டில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. வாடகை கார்களை போல பைக் டாக்சிகளும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இப்போது பயன்பாட்டில் உள்ளன. இதற்கு முறையான அனுமதி இல்லாத போதிலும் போக்குவத்து நெரிசலான நேரங்களில் பைக் டாக்சியில் சென்றால் நாம் செல்லும் இடங்களுக்கு சீக்கிரமாக சென்று விட முடியும் என்பதால் இதற்கு வரவேற்பும் உள்ளது.

இந்த பைக் டாக்சியை சென்னையில் இளைஞர்கள் பலர் விரும்பி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தனியாக வெளியில் செல்லும் நேரங்களில் இந்த பைக் டாக்சி பயனுள்ளதாக இருப்பதாக வாலிபர்கள் தெரிவிக்கின்றனர். இளம்பெண்கள் மத்தியிலும் இந்த பைக் டாக்சிக்கு வரவேற்பு உள்ளது. அவர்களும் பைக் டாக்சிகளை கால் டாக்சி போல பதிவு செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இந்த பைக் டாக்சிகளுக்கு தமிழக அரசு விரைவில் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்தே பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.



இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:-

மோட்டார் வாகன சட்டப்படி சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும்.

பைக் டாக்சிகளை வணிக பயன்பாட்டுக்கென பதிவு செய்யும் நடைமுறையும் விரைவில் வர உள்ளது. இதன் பின்னர் பைக் டாக்சிகளுக்கு முறைப்படி அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பைக் டாக்சிகளை ஒட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்கிற விதிமுறையும் தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது. பைக் டாக்சி நிறுவனமே பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களின் ஹெல்மட்டையும் ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அவசரமாக செல்லவும், போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லாத இடங்களுக்கும் இந்த பைக் டாக்சி பயனுள்ளதாக இருக்கும் என்றே தெரிகிறது.

டெல்லி, கர்நாடகம், அரியானா போன்ற மாநிலங்களில் பைக் டாக்சி பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News