ஆன்மிகம்
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் காட்சி.

திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது: தர்ப்பணம் செய்து புனிதநீராடிய பக்தர்கள்

Published On 2021-02-11 05:22 GMT   |   Update On 2021-02-11 05:22 GMT
தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
நெல்லை :

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு ஆறு மற்றும் கடல் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இன்று தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தலையணை மற்றும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் புனிதநீராடினார்கள்.

இதையொட்டி பாபநாசம் படித்துறை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் பகுதி ஆகியவற்றிலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் நீராடினார்கள்.

இதையொட்டி தாமிபரணி ஆற்று பகுதியில் சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஏராளமான அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். இதனால் தாமிபரணி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருச்செந்தூரில் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தஆண்டு தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள தெர்மல்நகரில் காலை முதலே ஏராளமான பக்தர் கள் கடற்கரையில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி னார்கள்.

தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயலில் தாமிரபரணி ஆற்றின் மூன்று பிரிவுகள் ஒன்றாக சேர்ந்து சங்கமிக்கும் இடமான மூணாற்று முக்கு, மற்றும் சங்குமுகம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள். பழையகாயல் கடற்கரை அருகே உள்ள பிள்ளையார் கோவிலிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதனால் அருவிகரைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு அனைத்து நீர்நிலைகள் அருகே உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கூடியதால் பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி அந்த பகுதயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தையும் ஒழுங்குபடுத்தினர்.

பாபநாசம், நெல்லை போன்ற முக்கிய பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஆற்றில் உள்ள கழிவுபொருட்களை அகற்றி தூய்மைபடுத்தினர்.
Tags:    

Similar News