கோவில்கள்
சாயாவனேஸ்வரர் திருக்கோவில்

காசிக்கு நிகராக சாயாவனேஸ்வரர் திருக்கோவில்

Published On 2021-12-21 03:25 GMT   |   Update On 2021-12-21 03:25 GMT
தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 9-வது தலம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. காசிக்கு நிகராக சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது, சாயாவனம் என்ற ஊர். இந்த ஊரின் சாலைஓரத்திலேயே, மிகவும் பழமையான சாயாவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 9-வது தலம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. காசிக்கு நிகராக சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.

தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் தாய் அதிதிக்கு, பூலோகத்தில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாக இருந்துவந்தது. அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, அதிதி பூமிக்கு வந்தாள். தாயை காணாமல் தேடிய இந்திரன், தனது தாய் சாயாவனத்தில் இருப்பதையும், அந்த வனத்தில் இருக்கும் இறைவனின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டான்.

அவன் தன் தாய் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, தனது தாய் தினமும் வழிபாடு செய்யும் வகையில் சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சொர்க்கலோகத்திற்கே கொண்டு சென்று விடுவது என்று முடிவெடுத்தான். இதற்காக தன்னுடைய வாகனமான ஐராவதம் என்ற பெயர் கொண்ட வெள்ளை யானையை வைத்து, கோவிலை இழுத்துச் செல்ல முயற்சித்தான். அப்போது பார்வதி தேவி, குயில் போல இனிமையாக கூவினாள். இதன் காரணமாகத்தான் இத்தல அம்மனுக்கு ‘குயிலினும் இனிமொழியம்மை’ என்ற பெயர் வந்தது. இனிமையான சத்தம் கேட்டதும், அந்த இடத்தில் தோன்றிய சிவபெருமான், இந்திரன் செய்யும் தவறை சுட்டிக்காட்டினார். பின்னர், “நீயும் உன் தாயாரும் இங்கேயே வந்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். தேவலோகத்திற்கு ஆலயத்தை எடுத்துச் செல்வது என்பது நடக்காத காரியம்” என்றார். இதையடுத்து இந்திரனும், அவனது தாய் அதிதியும் பூலோகத்திற்கு வந்தே ஆலயத்தை தரிசனம் செய்து சென்றனர்.

‘சாய்’ என்பதற்கு ‘கோரை’ என்று பொருள். இந்தப் பகுதியில் பசுமையான கோரைப்புற்கள் மிகுந்திருந்த காரணத்தால், இது ‘சாய்காடு’ என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சோழ மன்னர்களில் ஒருவனான கோச்செங்கட் சோழன் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த பெரும்பாலான கோவில்கள் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டதாகும். அதாவது யானையால் ஏறிச் செல்ல முடியாத வகையில் கட்டப்பட்ட ஆலயங்கள். அப்படிப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றுதான், சாயாவனேஸ்வரர் கோவிலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருத்தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதாக விளங்குகிறது. சிவனடியார்கள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத இயற்பகையார் பிறந்து, முக்தி அடைந்த திருத்தலம் இதுவாகும். மேலும் இந்த ஆலயத்தில் வில்லேந்திய திருக்கோலத்தில் வித்தியாசமான தோற்றத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். பஞ்சலோகத்தால் ஆன திருமேனி இதுவாகும். நான்கு கரங்களுடன் உயர்ந்த மயிலுடன் வீற்றிருக்கும் இந்த சிலையை, நெடுங்காலத்திற்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுத்ததாகக் சொல் கிறார்கள். எதிரிகள் பயம் விலக இந்த வில்லேந்திய வேலவனை வழிபடலாம் என்கிறார்கள்.

இத்தல இறைவனான சாயாவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். வாழ்வில் அனைத்து இன்பங்களும் கிடைக்க, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள், இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை மாத பவுர்ணமி அன்று தொடங்கி 21 நாட்கள் நடைபெறும் இந்திர விழா பிரசித்தமானது. அதே போல் ஆடி அமாவாசையில் நடைபெறும் அன்னமளிப்பு விழா, இயற்பகை நாயனார் திருவிழா போன்றவையும் விமரிசையாக நடைபெறும்.
Tags:    

Similar News