செய்திகள்
கடம்பூர் மலைப்பாதையில் மழையால் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்.

கடம்பூர் வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை- போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-10-16 17:02 GMT   |   Update On 2019-10-16 17:02 GMT
ஈரோடு மாவட்ட கடம்பூர் வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து போக முடியாமல் நின்றன.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டியது. குறிப்பாக வனப்பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது.

சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூர் மல்லியம்துர்க்கம், காடகநல்லி, குத்தியா லத்தூர், ஈரட்டி உள்பட சுற்று வட்டார வனப்பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை நள்ளிரவு 12 மணி வரை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழையால் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் நால்ரோட்டில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பதையில் ரோட்டோரம் புகழ்மிக்க மல்லியம்மாள் கோவில் உள்ளது. குறுகிய வளைவு பாதையில் உள்ள இந்த மலையின் மேல் பகுதியிலிருந்து பேரிறைச்சலுடன் தண்ணீர் குற்றால அருவி போல் கொட்டி ரோட்டை ஆக்கிரமித்தப்படி பாய்ந்து மறுகரையில் உள்ள பள்ளத்தில் கொட்டியது.

ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று நள்ளிரவு முதல் கடம்பூர்-சத்தியமங்கலம் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து போக முடியாமல் நின்றன. இதில் பல வாகனங்கள் சிரமத்துடன் திரும்பி சென்றன.

கடம்பூர் மலை பகுதியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் அப்பகுதியில் பார்க்கும் இடம் எல்லாம் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டியது.

Tags:    

Similar News