ஆன்மிகம்
பத்மநாபபுரத்துக்கு வந்த சாமி சிலைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு கொடுத்த போது எடுத்த படம்.

நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2021-10-20 04:40 GMT   |   Update On 2021-10-20 04:40 GMT
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய சாமி சிலைகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், மன்னர்கள் தங்களது தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். அதன்பிறகு நவராத்திரி விழாவும் அங்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 3-ந் தேதி அன்று பத்மநாபபுரம் அரண்மனையில் 3 சாமிகளும் ஒன்று கூடி நவராத்திரி விழாவுக்கு புறப்பட்டு சென்று பங்கேற்றது.

அங்கு சரஸ்வதி அம்மன் கோட்டை பகுதியில் உள்ள நவராத்திரி மண்டபத்திலும், வேளிமனை முருகன் ஆரியசாலை தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜைக்காக வைக்கப்பட்டது. அங்கு நவராத்திரி பூஜைகள் முடிந்த பிறகு கடந்த 17-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு ஊர்வலமாக புறப்பட்டது.

அதன்படி அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி அம்மன் சிலைகள் நேற்றுமுன்தினம் மாலை தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அன்றைய தினம் குழித்துறையில் தங்கியது. நேற்று காலை மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சரஸ்வதி அம்மன் தேவாரக்கட்டு கோவிலுக்குள் சென்று அங்குள்ள தெப்பக்குளத்தில் ஆராட்டு நடந்தது. சந்தனம், களபம், பன்னீர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, நல்லெண்ணெய், பால், தயிர் குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறைக்குள் சாமி கொண்டு செல்லப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் வேளிமலை முருகன் குமாரகோவிலுக்கு சென்றது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் நேற்று தங்கியது. இன்று (புதன்கிழமை) அதிகாலை அம்மன் புறப்பட்டு சுசீந்திரம் கோவிலை சென்றடைகிறது.
Tags:    

Similar News