செய்திகள்
ராதாகிருஷ்ணன்

பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்- சுகாதார துறை செயலாளர் பேட்டி

Published On 2020-10-14 06:13 GMT   |   Update On 2020-10-14 06:13 GMT
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். அங்கு கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த பிறகு டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தாலுகா அளவிலான மருத்துவ மனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

மதுரை மாவட்டத்தில் முன்பு கொரோனா பாதிப்பு 450 என்கிற அளவில் இருந்தது. ஆனால் இது தற்போது 50 என்கிற அளவில் குறைந்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது.

கேரளா மற்றும் வட மாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பண்டிகை, மழை, குளிர் காலம் தொடங்குகிறது. இக்காலத்தில் கண்டிப்பாக கூட்டம்கூடுவதை தவிர்க்க வேண்டும்.

முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின் பற்றுவது, கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால், கொரோனா நோயில் இருந்து அனைவரும் முற்றிலுமாக விடுபட முடியும்.

மதுரை கொரோனா ஆஸ்பத்திரியில் 589 படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது.

பொது மக்களில் எவரேனும் 3 நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

கொரோனா நோய் தொற்று ஆரம்ப நிலையிலுள்ள முதியவர்கள் பலரை குணப்படுத்தி உள்ளோம். கொரோனா நோய் நுரையீரல் வரை பரவிய பிறகு, ஆஸ்பத்திரிக்கு வருவோரை காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம்.

தமிழகத்தில் காய்ச்சல் முகாம்கள் குறைக்கப்பட வில்லை. தமிழகத்தில் 56 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது. கொரோனா தொடர்பாக தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது பொதுமக்கள் கையில் தான் உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜப்பான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அங்கு பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News