ஆன்மிகம்
இயேசு

கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்

Published On 2021-01-04 07:44 GMT   |   Update On 2021-01-04 07:44 GMT
மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
கடவுள், தம் மக்களை பாவம் என்னும் இருளில் இருந்தும், அடிமை வாழ்வில் இருந்தும் விடுவிக்க தொடக்க காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியாக முயற்சித்தார். ஆனால், நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு என்னும் பேரொளியை அளிக்கின்றார். ஆனால், நாமோ அவரது அன்பை உதறித்தள்ளி விட்டு பாவ வழியில் வாழ்கிறோம். எளிய முறையில் குழந்தை வடிவில் பிறந்த கடவுள், அவரிடம் இருக்கின்ற வாழ்வு தான், இன்று மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஒளியாக விளங்குகிறது. கடவுள் மனிதராக பிறந்தது மானிட குலத்துக்கு மாபெரும் கொடையாக அமைந்துள்ளது.

மனுகுலம் பாவத்தில் இருந்து முழு விடுதலைபெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்து பிறப்பின் நோக்கமாக இருந்தது. இயேசு என்ற பெயருக்கு பாவத்தில் இருந்து விடுதலை அளிப்பவர், அதாவது மீட்பர் என்று பொருள். இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல் வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு, இறைத்தூதரால் அறிவிக்கப்பட்டது.

இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் என்பதை மேய்ப்பர்கள் மட்டுமே முதலாவது கண்டனர். ஏழைகளுக்கு காட்சியளிப்பவராய், ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவில் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரின் தாழ்மை அனைத்து ஏழை-எளிய மக்களோடு ஒன்றிணைந்து வாழ அறைகூவல் விடுக்கிறது. இப்படிப்பட்ட வாழ்வே இம்மண்ணில் நமக்கு முழுமையான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அனுதினமும் அருளச்செய்யும்.

இயேசு பிறந்த போது ஏரோது அரசன் கலங்கினான்(மத்தேயு 2:3), மீட்பரின் பிறப்பால் தனது ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்று அஞ்சிய ஏரோதின் சதியும், சூழ்ச்சியும் வீழ்ச்சியுற்றன. மாநிலம் மாட்சி கண்டது. விண்ணவர் வாழ்த்திட, மன்னவர் மகிழ்ந்தனர்.

‘உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்’ என்று இயேசு சொன்னதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கிற போது நம்மால் கடவுளின் விண்ணுலகை அடைய முடியும்.

தற்போது, கொரோனா என்னும் கொடிய நோய்தொற்றின் காரணமாக உறவுகளை இழந்து, பொருளாதாரத்தை இழந்து வறுமையில் வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்கும் மக்களின் அச்சம் அகன்று ஆறுதல் பெறவும், இழப்பை மறந்து மீட்பு பெற, இயலாமை என்பது இல்லாமல் போக எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற அவர்களோடு உடனிருப்போம், அன்பு செய்வோம், ஆறுதல் கூறுவோம்.

மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.

எளிமையின் சின்னமாய் உலகை மீட்க கடவுள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். தொழுவத்தில் பிறந்த கிறிஸ்து நம் உள்ளங்களில் பிறக்க வழி செய்வோம்.

கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைபிடித்து செயல்படுவோம். உலக மீட்பர் பாலன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக.

எழில் மிகு காட்சியளிக்கும் குமரியில் பண்பான தலைசிறந்த பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வரும், கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக என் இனிய கிறிஸ்து பிறப்பு திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Tags:    

Similar News