செய்திகள்
பூசணி

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பூசணி சாகுபடி

Published On 2021-06-04 06:34 GMT   |   Update On 2021-06-04 06:34 GMT
மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பயிரான பூசணி பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் பாசன நீர் பற்றாக்குறை பல பகுதியில் உள்ளது. இதனால்  பெரும்பாலான விவசாயிகள்  பாசன நீர் குறைவான மாற்றுப்பயிர் சாகுபடியை விரும்புகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கதாக  பூசணி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பயிராக உள்ளது.

குறைந்த சாகுபடி செலவு , சொட்டுநீர் முறையில் பாசனம், குறைவான தொழிலாளர்கள் பயன்பாடு, ஆண்டு முழுவதும் தேவை, இருப்பு வைத்து விற்கும் வாய்ப்பு  என பல வகையில் விவசாயிகளுக்கு கைகொடுப்பதாக இந்த சாகுபடி உள்ளது.இதோடு எதிர்வரும் மாதங்களில் விசேஷ தினங்கள் அதிகம் உள்ளதால்  இதன் தேவை கூடுதலாக இருக்கும். இதை எதிர்பார்த்து பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு ஏக்கர் பூசணி சாகுபடிக்கு 900 கிராம் விதை தேவைப்படும். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 15ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சொட்டு நீர் பாசனம் அமைத்தால் நீர் சேமிக்கப்படும். விதைப்பிற்கு பின்பு மூன்று மாதங்கள் கடந்து பூசணிக்காய்கள் அறுவடை செய்யலாம். அதிகபட்சமாக  ஒரு ஏக்கருக்கு  15 டன் எதிர்பார்த்துள்ளோம். நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு காய் மூன்று முதல் 5 கிலோ வரை எடை இருக்கும்.தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. ஆகஸ்ட்  மாத தொடக்கத்தில் பறிக்கத்தொடங்குவோம். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News