செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது- அமைச்சர் தகவல்

Published On 2020-11-06 01:15 GMT   |   Update On 2020-11-06 01:15 GMT
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு நல மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் நவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி குழந்தைகள் அரசு நல மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை ஏற்று, நவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி பயன்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். அதன் பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மருத்துவமனையில் அதிநவீன கருவிகள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் 55 சி.டி. ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனையில் இதுவரை 115 சி.டி. ஸ்கேன் எந்திரம் செயல்பட்டு வருகிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,100 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்கது. தமிழகம் முழுவதும் 64 ஆயிரத்து 193 குழந்தைகள் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடைகளில் விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பண்டிகை காலங்களில் முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்களை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் முககவசம் அணிந்து கடைகளுக்கு செல்லலாம். இதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

இ-சஞ்சீவினி இணையதளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர். இ-சஞ்சீவினி பயன்பாட்டில் தொடர்ந்து தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது. கொரோனா பிந்தைய தொடர் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் தான் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அங்கு குணமடைந்த நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனையிலும் கொரோனா பிந்தைய தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுடன், மற்ற தொற்று நோய் தடுப்பு பணிகளையும் களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு(2019) அக்டோபர், நவம்பர், டிசம்பரை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 15 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலையை தக்க வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News