உள்ளூர் செய்திகள்
கள்ளநோட்டு

கள்ளநோட்டுகளுடன் சிக்கிய கும்பல் - இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி

Published On 2021-12-08 08:58 GMT   |   Update On 2021-12-08 08:58 GMT
ஆம்பூர் அருகே கள்ளநோட்டுகளுடன் சிக்கிய கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள வெங்கிளி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காரில் வந்த ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த புடவை வியாபாரி குணசேகரன் என்பவரிடம் சொகுசு காரில் வந்த கும்பல் போலீஸ் போல் நடித்து ரூ.1.45 லட்சம் பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆம்பூர் அருகே நேற்று மதியம் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை போலீசார் மடக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் அந்த கார் வேகமாக நிற்காமல் சென்று விட்டது. உஷாரான போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.

அந்த கும்பலின் கார் பச்சகுப்பம் பாலத்தின் அடியில் செல்லும் சாலைக்குள் புகுந்தது. அங்கு பாலாற்று வெள்ளம் காரணமாக சாலை அடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பல் காரை திருப்பினர். அப்போது தங்களை துரத்தி வந்த போலீசார் மீது காரை ஏற்ற முயன்றனர்.

சுதாரித்துக்கொண்ட போலீசார் கும்பல் மீது கற்களை வீசி சேதப்படுத்தி பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி வேலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றனர்.

மாதனூர் அருகே சென்றபோது திடீரென கார் ஓடுகத்தூர் சாலைக்கு செல்ல முயன்றது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு தடுப்பு ஏற்படுத்தி இருந்ததால் அந்த கார் எம்.எம். நகர் அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி நின்றது.

உடனே காரில் இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பையூர் சேர்ந்த பெருமாள் (வயது 45) வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (36) என்பது தெரியவந்தது. அவர்களிடம் 2 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 46 கட்டுகள் இருந்தன.

சீனிவாசன் கொடுத்த தகவலின் பேரில் ஒடுகத்தூர் நோக்கி சென்ற ஒரு காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (30), வேலூர் அடுத்த பொய்கையை சேர்ந்த சுரேஷ், தினகரன் மற்றும் குடியாத்தம் தாலுகா சின்ன தோட்டாளத்தை சேர்ந்த சரத்குமார் ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.

பறிமுதல் செய்த கள்ளநோட்டுகளை சோதனை செய்த போது ஒவ்வொரு கட்டிலும் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் மட்டும் ரூ.500 கள்ள நோட்டுகள் அவற்றிற்கு இடையே வெற்றுக் காகிதங்களை வைத்து ரூபாய் நோட்டுக் நோட்டுகளை போன்று வைத்திருந்தது தெரியவந்தது.

அதேபோல் ரூ.2000 நோட்டு கட்டுகள் வெற்றுக் காகிதங்களுடன் இருந்தன. பணம் கொடுத்தால் அதற்கு இரு மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் ஏமாற்றி பணம் பறிப்பதற்காக அவற்றை தயார் செய்து வைத்து சுற்றி திரிந்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு பட்டுப்புடவை வியாபாரியிடமிருந்து போலீஸ் போல் நடித்து ரூ.1.45 லட்சம் பறித்து சென்றதும் தெரியவந்தது.

அந்த பணத்தை திருவண்ணாமலை மாவட்டம் இரும்புலியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் இரும்புலி கிராமத்திற்கு சென்று சதீஷ் குமாரை பிடித்தனர். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ 500 கள்ள நோட்டுகள் மற்றும் ரூபாய் நோட்டு போன்ற வெற்று பேப்பர் 8 செல்போன்கள் 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 7 பேரையும் ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.அந்த கும்பலிடம் டிஎஸ்பி சரவணன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News