செய்திகள்
மாடுகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவை

Published On 2021-10-30 02:57 GMT   |   Update On 2021-10-30 02:57 GMT
பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கான தாது உப்புக்கலவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்துவைத்தார்.
புதுச்சேரி:

அனைத்து வகையான மாடுகளுக்கு தாது உப்புக்கலவை கொடுப்பது அவசியமாகும். தாது உப்புக்கலவை என்பது சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து போன்ற நுண்சத்துகள் அடங்கிய கலவையாகும். இந்த கலவையானது ஒவ்வொரு மண்ணின் தன்மைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடும்.

புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உணவியல் துறையின் மூலம் மண்வளம் மற்றும் தீவன பரிசோதனை அடிப்படையில் புதுச்சேரி மாடுகளுக்கான பிரத்தியேக தாது உப்புக்கலவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் 5 முதல் 10 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும். கன்று ஈணும் இடைவெளியை குறைக்கும். இனப்பெருக்க திறன் மேம்படும். இது ஒரு கிலோ ரூ.55-க்கு கல்லூரியின் விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வடிவமாக பிளாஸ்டிக் அல்லாமல் மக்கும் திறன்கொண்ட பைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கால்நடை உணவியல் துறையின் சார்பாக தீவன அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பால் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் என அனைவரும் எளிதில் பயன்படுத்தி மாடுகளின் எடை மற்றும் பால் உற்பத்தியின் அளவுக்கேற்ப சமச்சீர் தீவனத்தை அவரவர் இல்லத்திலேயே நிர்ணயித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த சமச்சீர் தீவனம் அளிப்பதன் மூலம் மாடுகளின் நலன் மற்றும் பால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும்.

இவற்றை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கல்லூரியின் புலமுதல்வர் டாக்டர் ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News