செய்திகள்
வெடிபொருட்கள் கண்டெடுப்பு

காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் முறியடிப்பு - 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு

Published On 2020-09-17 17:32 GMT   |   Update On 2020-09-17 17:32 GMT
ஜம்மு மற்றும் காஷ்மீரின் நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதல் சம்பவ பகுதியருகே 52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காடிகல் பகுதியில் கரேவா என்ற இடத்தில் 250 லிட்டர் தண்ணீர் நிரப்பும் தொட்டி ஒன்று நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.  இதனை பற்றிய ரகசிய தகவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினருக்கு தெரிய வந்தது.

அந்த தொட்டியில் 125 கிராம் எடை கொண்ட வெடிபொருட்கள் 416 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.  இதனை தொடர்ந்து நடந்த மற்றொரு தேடுதல் சம்பவத்தில் இதேபோன்ற தொட்டி ஒன்றில் 50 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த பகுதியானது கடந்த 2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் இருந்து 9 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.  கடந்த ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி நடந்த அந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த தாக்குதலுக்கு 35 கிலோ எடை கொண்ட ஆர்.டி.எக்ஸ் வகை வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.  இதுதவிர ஜெலாட்டின் குச்சிகளும் தாக்குதலுக்கு கூடுதலாக பயன்படுத்தப்பட்டன.  பின்னர், இதற்கு பின்னணியாக செயல்பட்ட பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.

இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.  இந்நிலையில் காடிகல் பகுதியில் கரேவா என்ற இடத்தில்  52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளது.  இதனால் மற்றொரு புல்வாமா தாக்குதல் நடக்காமல் முன்பே முறியடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News