செய்திகள்
கோப்புப்படம்

மாதவரம் பழ மார்க்கெட்டில் ஆப்பிள்-சாத்துக்குடி-கொய்யா பழங்கள் விற்பனை அதிகரிப்பு

Published On 2020-10-23 08:14 GMT   |   Update On 2020-10-23 08:14 GMT
ஆயுத பூஜையையொட்டி மாதவரம் பழ மார்க்கெட்டுக்கு ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யா பழங்கள் அதிகளவில் வருகின்றன. அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்ற வியாபாரத்தல் பாதி அளவில்தான் மாதவரத்தில் நடைபெறுவதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.
மாதவரம்:

கொரோனா பரவலையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டும், பழ மார்க்கெட்டும் இடமாற்றம் செய்யப்பட்டது.

காய்கறி மார்க்கெட் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கோயம்பேட்டில் இயங்க தொடங்கியது. அங்கு மொத்த விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாதவரத்துக்கு மாற்றப்பட்ட பழ மார்க்கெட் தொடர்ந்து அங்கேயே இயங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து பழ மார்க்கெட் மாதவரம் பஸ் நிலைய வளாகத்திலேயே செயல்படுகிறது.

கடந்த 6 மாதங்களாக 300 கடைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்பட்டது. மீதமுள்ள 600 வியாபாரிகளுக்கு பழ வியாபாரத்துக்கு இன்னமும் அனுமதிக்க கொடுக்கவில்லை.

பழ மார்க்கெட்டில் உள்ள 300 கடைகளுக்கும் தினமும் நள்ளிரவில் பழங்கள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் 250 லாரிகளில் பழங்கள் வரழைக்கப்படுகின்றன. நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 8 மணி வரையில் மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெறுகிறது.

வியாபாரிகள் இந்த நேரத்தில் மார்க்கெட்டுக்கு பழங்களை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். 8 மணிக்கு பிறகு பழ மார்க்கெட் மூடப்பட்டு வருகிறது.

இதன் பின்னர் பழ மார்க்கெட்டுக்கு வெளியில் வைத்து பலர் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

ஆயுத பூஜையையொட்டி மாதவரம் பழ மார்க்கெட்டுக்கு ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யா பழங்கள் அதிகளவில் வருகின்றன. அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்ற வியாபாரத்தல் பாதி அளவில்தான் மாதவரத்தில் நடைபெறுவதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.

50 சதவீத அளவுக்கே பழங்கள் வரவழைக்கப்படுவதாகவும், தேவை அதிகரித்துள்ளதால் அந்த பழங்கள் விற்பனையாகி விடுகின்றன என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாளை மறுநாள் ஆயுத பூஜை கொண்டாடப்பட இருப்பதால் நாளையும், அதற்கு மறுநாள் பழ வியாபாரம் சூடு பிடிக்கும். எனவே இந்த 2 நாட்கள் கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என்று பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி வரையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட 300 கடைகளையும் 8 மணிக்கு மூடச்சொல்லும் அதிகாரிகள் அனுமதியின்றி மார்க்கெட்டுக்கு வெளியில் நடைபெறும் விற்பனையை கண்டுகொள்வது இல்லை என்று குற்றம் சாட்டினார்.

கோயம்பேட்டுக்கு பழ மார்க்கெட் வருகிற 1-ந்தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை பழ வியாபாரிகள் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, கோயம்பேட்டுக்கு பழ மார்க்கெட்டை மாற்றினால்தான் முழுமையாக அனைத்து வியாபாரிகளும் பயன் அடைவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். சிறிது காலம் காத்திருக்க சொல்லி உள்ளனர். வியாபாரிகள் நலன் கருதி பழ மார்க்கெட்டை கோயம்பேட்டில் மீண்டும் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News