செய்திகள்
ஆரே பகுதி மற்றும் சமூக ஆர்வலர்

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

Published On 2019-10-21 11:56 GMT   |   Update On 2019-10-21 14:40 GMT
மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் ஆனால் வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலம் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் சார்பில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை கடந்த 4-ம் தேதி மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவையடுத்து அன்று இரவே மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை ஏதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 7-ம் தேதி ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகத்துக்கு தடை விதித்து  உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆரே பகுதியில் எந்த மரங்களும் வெட்ட்டப்படவில்லை என தெரிவித்தார். 



இதையடுத்து, மெட்ரோ நிலையத்துக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை. ஆனால் அப்பகுதியில் இதுவரை வெட்டப்பட்ட மரங்கள், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக நடப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். 

மேலும், அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News