உள்ளூர் செய்திகள்
யானை

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1, 160 யானைகள் பலி

Published On 2021-12-03 05:38 GMT   |   Update On 2021-12-03 05:42 GMT
இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரெயில் மோதி இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீ.கே.புதூர்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் யானைகள் குறித்த கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் இறந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது இருக்கும் யானைகளின் எண்ணிக்கை மற்றும் யானைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.

அதற்கு யானைகள் திட்ட வல்லுநரும், தலைமை பொது தகவல் அலுவலருமான முத்தமிழ் செல்வன் அளித்த பதிலில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரெயில் மோதி இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன.

தமிழகத்தில் 5 யானைகள் இறந்துள்ளன. இதுவரை மின்சாரம் தாக்கி 741 யானைகளும், வேட்டையாடப்பட்டு 169 யானைகளும் இறந்துள்ளன. மேலும் வி‌ஷம் வைத்தும் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. அசாமில் 32 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 1, 160 யானைகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.


கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியா முழுவதும் 29, 964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 2,761 யானைகள் உள்ளதாக கணக்கீடு தெரிவிக்கிறது. மேலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 14,612 யானைகளும், வடகிழக்கு மாநில மண்டலத்தில் 10,139 யானைகளும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜா கூறுகையில், சமீப காலங்களில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் மொத்த விலங்கினம், மனித இனம் அழிவுப்பாதைக்கு செல்லும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு யானைகள் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்...இந்தியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு: மோடி அரசை மக்கள் விரைவில் தண்டிப்பார்கள் - கே.எஸ்.அழகிரி

Tags:    

Similar News