செய்திகள்
சாலையில் மக்காச்சோளம் விற்கும் ஆசிரியைகள்.

ஊரடங்கால் வேலையிழப்பு: சாலையோரம் மக்காச்சோளம் விற்கும் தனியார் பள்ளி ஆசிரியைகள்

Published On 2020-08-15 11:11 GMT   |   Update On 2020-08-15 11:13 GMT
நாகையில், ஊரடங்கால் வேலையிழந்த தனியார் பள்ளி ஆசிரியைகள், சாலையோரத்தில் மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகிறார்கள். தங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

கொரோனா நோய் பலருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. பெரு நகரங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் ஊரடங்கால், வேலையிழந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

பள்ளிகளை திறக்காமலேயே ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து வருமானம் ஈட்ட வேறு வேலைகளை தேடும் நிலையில் உள்ளனர். நாகை மாவட்டத்திலும் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாகை பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேர் தங்கள் வேலையை இழந்து தற்போது வருமானத்துக்காக சாலையோரம் மக்காச்சோளத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான மயிலாடுதுறையை சேர்ந்த காயத்ரி(வயது 38) கூறியதாவது:- ஆசிரியராக வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக பி.எட். கணிதம் படித்தேன். மயிலாடுதுறை பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளியில் கணித ஆசிரியை வேலையும் கிடைத்தது. இந்த நிலையில் எனது வாழ்வில் இடியாய் வந்து விழுந்தது இந்த கொரோனா. ஊரடங்கால் நான் பணிபுரிந்த பள்ளி மூடப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக எனக்கு வேலையில்லை. மாத வருமானம் பறிபோனது.

கொத்தனாரான எனது கணவருக்கும் வேலையில்லாததால் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனது பள்ளி தோழி செல்வியும் தனியார் பள்ளியில் ஆசிரியை வேலையை இழந்து தவிக்கிறார். அவரும், நானும் கலந்து பேசி எங்கள் வாழ்க்கையை நகர்த்த நேர்மையான முறையில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். இதனையடுத்து நாகையில் சாலையோரத்தில் குறைந்த விலைக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து எங்களது நிலைமையை தற்காலிகமாக சமாளித்து வருகிறோம்
Tags:    

Similar News