செய்திகள்
ரோகித் சர்மா, புஜாரா

ரோகித், புஜாரா அபார ஆட்டம்- 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 270/3

Published On 2021-09-04 17:26 GMT   |   Update On 2021-09-04 17:26 GMT
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
ஓவல்:

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் அடித்தன. இதையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இதன்மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 127 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய புஜாரா, 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 237/3.

அதன்பின்னர் விராட் கோலி, ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாட, 92 ஓவர் முடிந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்டநேரமாக வானிலை சீரடையாததால், 3வது நாள் ஆட்டம் அத்துடன் நிறைவு செய்யப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News