செய்திகள்
விராட் கோலி - ரோகித் சர்மா

20 ஓவர் உலக கோப்பைக்காக ஐ.பி.எல். போட்டியிலும் தொடக்க வீரராக ஆடுவேன் - விராட்கோலி

Published On 2021-03-21 07:19 GMT   |   Update On 2021-03-21 07:19 GMT
20 ஓவர் உலக கோப்பைக்கு தயார்படுத்தி கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டியிலும் தொடக்க வீரராக ஆட இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்:

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.

கேப்டன் விராட் கோலி 52 பந்தில் 80 ரன்னும், (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 34 பந்தில் 64 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்ய குமார் யாதவ் 17 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டேவிட் மெலன் 46 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), பட்லர் 34 பந்தில் 52 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். ‌ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்த தொடரில் தொடக்க ஜோடி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடாததால், கேப்டனே தொடக்க வீரராக ஆடினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

ரோகித் சர்மாவும், கோலியும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 9 ஓவரில் 94 ரன் எடுத்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு தயார்படுத்தி கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டியிலும் தொடக்க வீரராக ஆட இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நான் இதற்கு முன்பு பல்வேறு நிலைகளில் களம் இறங்கி உள்ளேன். மிடில் வரிசையில் நல்ல நிலையில் இருக்கிறேன். 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை 2 சிறந்த வீரர்கள் அதிக பந்துகளை எதிர்கொள்வதுதான் நல்லது. எனவே ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்கத்தில் களம் இறங்குவதை விரும்புகிறேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடி, நல்ல நிலை அமைந்துவிட்டால் எதிரணிக்கு பாதிப்புதான். இதை தான் நாங்கள் விரும்புகிறோம்.

எங்கள் இருவரில் ஒருவர் களத்தில் இருந்தால், மற்ற வீரர்கள் தன்னம்பிக்கை அடைகின்றனர். அவர்களால் சுதந்திரமாக ஆட முடியும். இது அணிக்கு நல்லதாக அமையும். எனவே இதையே தொடரலாம் என்று நினைக்கிறேன்.

ஐ.பி.எல். போட்டியிலும் அதைத் தொடர்ந்து, உலக கோப்பையிலும் இதே நல்ல நிலைமையுடன் தொடக்க வீரராக ஆடுவேன்.

உலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கிறது.ஆனால் அதற்குள் பேட்டிங்வரிசை எப்படியிருக்கும் என்று இப்போது கூற முடியாது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக ஆடியது ஒரு சிறந்த முடிவு.

கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் தேவை என்பதால் ராகுலை துரதிர்ஷ்டவசமாக நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 23-ந் தேதி புனேயில் நடக்கிறது.


Tags:    

Similar News