ஆன்மிகம்
சப்தமாதர்

சந்தோஷம் நிலைக்கச் செய்யும் சப்தமாதர்

Published On 2019-12-31 08:46 GMT   |   Update On 2019-12-31 08:46 GMT
கவலைகளை தீர்க்கவே, இந்த மண்ணில் அவதரித்தவர்கள் சப்த கன்னியர் என்ற தேவ மாதாக்கள். புராண வரலாற்றில் இருவேறு விதங்களில் சப்த கன்னிகளின் தோற்றம் பற்றி விவரித்துள்ளனர்.
நம் ஆன்மிக வழிபாட்டில் பெண்மையை மேன்மைப்படுத்தும் விதமாக ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை” என்ற பழமொழி உள்ளது. அந்த வாக்கினில் ஆண் தெய்வங்களை விட, அதிக எண்ணிக்கையில் பெண் தெய்வங்களையே நாம் வழிபட்டு வருகிறோம். நம்முடைய வாழ்வில் சந்தோஷம் வரும்போது குதூகலம் அடையும் நாம், சங்கடங்கள் வரும்போது மட்டும் சுருங்கிபோய் ஆறுதல் சொல்லி அழ தெய்வங்களை நாடுகிறோம். அதுபோன்ற கவலைகளை தீர்க்கவே, இந்த மண்ணில் அவதரித்தவர்கள் சப்த கன்னியர் என்ற தேவ மாதாக்கள்.

பராசக்தியின் அம்சங்களாக, அவளில் இருந்து தோன்றியவர்களே இந்த சப்த கன்னிகள் என்னும் ஏழு பேர். புராண வரலாற்றில் இருவேறு விதங்களில் சப்த கன்னிகளின் தோற்றம் பற்றி விவரித்துள்ளனர்.

முதல் வரலாறாக, இறை சக்தியை எதிர்த்து தங்களை எளிதில் அழிக்க முடியாதபடி வரம் பெற்ற அசுரர்களை அழிக்க, இறைவியின் சொரூபங்களாக உருவாக்கப்பட்டவர்களே சப்த கன்னிகள். மனித கருவில் பிறக்காத வலிமையற்ற பெண்களால் தங்கள் மரணம் நிகழவேண்டுமென்ற அசுரர்களின் ஆணவத்தை அழிக்க அவதரித்த பெண் தெய்வங்கள் இவர்கள்.

இரண்டாவது வரலாறாக, அந்தகாசுரன் எனும் அசுரனுடன் சிவபெருமான் போரிட்டார். காயம்பட்ட அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தில் இருந்து அவன் பெற்ற வரத்தின்படி பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றினர். அவர்களை அழிக்கும் பொருட்டு சிவன் தன் வாய் அக்னியில் இருந்து யோகேஸ்வரி எனும் சக்தியையும் வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி மகேஸ்வரியையும் உருவாக்கினாள். அந்த மகேஸ்வரிக்குத் துணையாக பிரம்மா பிரம்மியையும், விஷ்ணு வைஷ்ணவியையும் இந்திரன் இந்திராணியையும், முருகன் கவுமாரியையும், வராகமூர்த்தி வராகியையும், எமன் சாமுண்டியையும் தோற்றுவித்ததாக புராணவழி செய்தி.

வரலாறு எப்படி இருந்தாலும் அடிப்படையில் அசுரர்களை அழிக்க உருவெடுத்த உத்தமப் பிறவிகளே இவர்கள். எனவே இவர்களை வணங்கும்போது நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகை களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மகேஸ்வரி: ஈசனின் அம்சமானவள். சினத்தை நீக்கி சாந்தத்தை அருள்பவள். சிவனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டவள். வடகிழக்குத் திசைக்கு அதிபதியானவள். உடலின் பித்தத்தை நீக்கி சுகம் தருபவள்.

பிரம்மி: சரஸ்வதியின் அம்சமாக பிரம்மனிடம் இருந்து தோன்றியவள். கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற வைப்பவள். மேற்குத் திசைக்கு அதி பதியான இவள், மூளையின் திறனை மேம்படுத்தி வெற்றியைத் தருபவள். தோலுக்கு உரித்தானவள் என்பதால் தோல் பிரச்சினைகளைத் தீர்ப்பவள்.

கவுமாரி: முருகனின் அம்சம் இவள். சஷ்டி என்றும், தேவசேனா என்றும் அழைக்கப்படுபவள். குழந்தைப் பேறு அருள்பவள். செவ்வாய் தோஷம் அகலவும், வீடு, மனை பிரச்சினைகளுக்கும் இவளை வழிபடலாம். ரத்தத்துக்கு உரித்தானவள் என்பதால், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவளை வழிபட்டால் அகலும்.

வைஷ்ணவி: திருமாலின் அம்சமாகத் தோன்றியவள். நாராயணி என்றும் அழைக்கப்படுகிறாள். திருமாலின் வடிவில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். செல்வம் பெறவும், பணிகள் சிறக்கவும் இவளை வழிபடலாம். விஷக்கடிகள், உடலில் தோன்றும் கட்டிகள் இந்த அன்னையை வழிபட்டால் குணமாகும்.

வராகி: வராக மூர்த்தியின் அம்சமாக அவரின் சொரூபமாகவே தோன்றியவள். சிவன், விஷ்ணுவுடன் சக்தியின் அம்சமும் கொண்டு, பெரும் வலிமையுடன் திகழ்பவள். கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் துவம்சம் செய்யக்கூடியவள். தடைகளை அகற்றி எதிரிகளை வெல்லும் துணிவைத் தருபவள். இவளை நம்பிக்கையுடன் வழிபடு பவர்களுக்கு துன்பங்கள் அகலும். வலிமையான எலும்புக்கு உரித்தானவள்.

இந்திராணி: இந்திரனின் அம்சமாக, செல்வத்துக்கு அதிபதியாகிய மகாலட்சுமியின் அழகிய சொரூபமாக முகத்தில் அமைதி தவழ காட்சி தருபவள். கடன் பிரச்சினைகள் தீரவும், தம்பதியர் ஒற்றுமைக்கும் வழிபட வேண்டியவள். நம் உடலுக்கு வடிவைத் தரும் சதைக்கு உரித்தானவள்.

சாமுண்டி: வீரத்துக்கு அதிபதியான இவளிடம், எவ்வித துர்சக்திகளும் தோற்றுப்போகும். இவளை நம்புவோருக்கு வாழ்வில் என்றும் பயம் கிடையாது. இவளை மனதில் நினைத்து வணங்கினாலே ஆயிரம் யானை பலத்துடன் உடல் நலனும் பெறலாம். உடலுக்கு உறுதியைத் தரும் நரம்பு, இவள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவளை வணங்குபவருக்கு நரம்பு பிரச்சினைகள் அகலும்.
Tags:    

Similar News