சிறப்புக் கட்டுரைகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான்: ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்- 26

Published On 2022-01-26 11:15 GMT   |   Update On 2022-01-26 11:15 GMT
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


சதாராவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடை பயணமாக திரும்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

இதுதான் பெரியவா புறப்பட்டுச் சென்ற கடைசி யாத்திரை.

மகான் செய்த எண்ணற்ற பாத யாத்திரையின் காரணமாக இவரது புனிதப் பாதங்கள் பாரத தேசத்தின் பல இடங்களிலும் பட்டன. மகானின் பாதம் பட்ட ஒவ்வொரு பகுதியும் புனிதம் அடைந்தது. புண்ணியம் பெற்றது.

1984-ம் ஆண்டு இந்தக் கடைசி பாத யாத்திரை பூர்த்தியாகி, காஞ்சி ஸ்ரீமடத்தை அடைந்தார் பெரியவா. அப்போது காஞ்சி நகரத்தின் எல்லையில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன் பின், அவர் சித்தி ஆகிற 1994-ம் ஆண்டு வரை அதாவது பத்து வருடங்கள் ஸ்ரீமடத்திலேயே இருந்தார். வருகின்ற பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

இந்தக் கடைசி யாத்திரை பூர்த்தியாகி, சதாராவில் இருந்து திரும்பி வருகிறபோது வேலூரில் அவருக்குப் பல இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

அதே வேளையில் இந்த யாத்திரைக்கு முன் 1960-களில் பெரியவா வேலூருக்கு வந்தபோது நடந்த நிகழ்வுகளைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வேலூரில் அப்போது டாக்டர் ராஜகோபால் என்பவர் வசித்து வந்தார். போளூர்தான் இவருக்கு சொந்த ஊர். மகா பெரியவா மீது டாக்டர் ராஜகோபாலுக்கு அதீத பக்தி.

தான் வசிக்கும் ஊரான வேலூருக்கு வந்த பெரியவாளை கவுரவிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராஜகோபால்.

அன்றைய தினம் மகா பெரியவாளின் ஜன்ம தினம். அதாவது, வைகாசி மாத அனு‌ஷ தினம்.

‘பெரியவாளை வணங்குவதற்கு இதைவிட உகந்த தினம் இல்லை’ என்று அனு‌ஷ தினத்தையே தேர்ந்தெடுத்தார் ராஜகோபால்.

அன்றைய தினம் தன் இல்லத்தில் மகா பெரியவாளின் நலனை வேண்டிப் பிரார்த்தித்து, சிறப்பு ஹோமங்களை நடத்தினார். நட்சத்திர ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற பலவற்றை பக்தி சிரத்தையுடன் நடத்தினார்.

செல்லப்பா சாஸ்திரிகளும் அவரோடு மேலும் ஐந்து பிரம் மச்சாரி வேத பண்டிதர்களும் இந்த ஹோமத்தை நடத்தி வைத்தனர்.

ஹோமம் முடிந்த பின் கலசத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட அந்தப் புனித நீரை மகா பெரியவாளிடம் சேர்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் டாக்டர் ராஜகோபால். இது தனக்குக் கிடைக்கப் போகிற மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினார்.

அதன்படி வேலூரில் பெரியவா முகாமிட்டிருந்த இடத்துக்கு இந்தப் புனித நீரைக் கொண்டு சென்று அர்ப்பணிக்க ஏற்பாடு செய்தார்.

இதற்கும் செல்லப்பா சாஸ்திரிகள்தான் துணை நின்றார்.

ஹோமத்தின்போது ஒரு வெள்ளிக் குடத்தில் நீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. நூல்களால் சுற்றப்பட்டு, மாவிலைக் கொத்துக்களால் மூடப்பட்டு அதன் மேல் ஒரு தேங்காயும் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் புனித கலசத்தைத் தன் இரு உள்ளங்கையிலும் ஏந்திக் கொண்டு புறப்பட்டார் செல்லப்பா.

டாக்டர் ராஜகோபால் பாரம்பரிய உடை அணிந்து தன் குடும்பத்தினருடன் வந்தார்.

மேள தாளத்துடன் இவர்கள் அனைவரும் பெரியவா முகாம் நோக்கிப் புறப்பட்டனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் பெரியவா தங்கி இருந்த இடத்தை அடைந்தார்கள்.

முகாமின் உள்ளேயும், முகாமுக்கு வெளியேயும் கூட்டமான கூட்டம் காணப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் உள்ளே மெள்ள நீந்திச் சென்று ஸ்ரீமடத்தின் பிரதான காரியஸ்தரைச் சந்தித்தார் ராஜகோபால். புனித நீர் கொண்டு வரப்பட்டிருக்கும் விவரம் சொன்னார்.

அதற்குள் ஸ்ரீமடத்தின் சிப்பந்திகள் சிலர் செல்லப்பா சாஸ்திரிகளிடம் வந்தார்கள். ‘‘நீங்க கொண்டு வந்திருக்கும் கலசத்தை இங்கே வைங்கோ’’ என்று அருகில் இருந்த ஒரு மர இருக்கையை காண்பித்தார்கள்.

அந்த மர இருக்கையில் ஏற்கனவே ஏழெட்டு கலசங்கள் காணப்பட்டன. அவை எல்லாம் பல்வேறு இடங்களில் பெரியவாளின் நலனுக்காகப் பிரார்த்தித்து மகானுக்கு அர்ப்பணிக்கக் கொண்டு வரப்பட்டவை என்பதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டார் செல்லப்பா சாஸ்திரிகள்.

மர இருக்கையின் ஒரு பகுதி காலியாகவே இருந்தது. கலசத்தை அங்கு வைக்கச் சொல்லி ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் அடையாளம் காண்பித்தார்கள். ஆனால், அதற்கு முன் ராஜகோபாலிடம், ‘‘ஒரு நிமி‌ஷம், இதைக் கொஞ்சம் கையில வெச்சுக்குங்கோ’’ என்று கலசத்தைக் கொடுத்தார்.

பிறகு, தன் மேல் துண்டால் அந்த மர பெஞ்ச்சில் காலியாக இருக்கும் பகுதியைத் துடைத்தார். அங்கு ஒரு கோலம் போட்டார். பிறகு ஒரு வாழையிலையைக் கோலத்தின் மீது விரித்தார்.

கலசத்தை ராஜகோபாலிடம் இருந்து வாங்கி, ‘பெரியவா... பெரியவா...’ என்று உதடுகள் உச்சரிக்க... அங்கே பயபக்தியுடன் வைத்தார்.

ராஜகோபாலும் செல்லப்பா சாஸ்திரிகளும் அங்கேயே ஓரமாகக் காத்திருக்க ஆரம்பித்தனர்.

சுமார் பத்து நிமிடங்கள் கடந்தன. மகா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த வேதபுரி மாமா மர இருக்கையின் அருகே வந்தார். ஏழெட்டு கலசங்கள் சாதாரணமான இடத்தில் வைக்கப்பட்டிருக்க... மாக்கோலம் போட்டு வாழையிலை பரத்தி அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் தனி கலசத்தைப் பார்த்தார். அதன் அருகே நின்று கொண்டிருக்கும் செல்லப்பா சாஸ்திரிகளையும் ஏற இறங்கப் பார்த்தார்.

‘‘இந்த கலசம் நீ எடுத்திண்டு வந்ததா?’’ என்று கேட்டார் வேதபுரி மாமா.

‘‘ஆமா மாமா... இதோ, டாக்டர் ராஜகோபால் சார். அவாத்துல இன்னிக்கு பெரியவாளுக்காக ஹோமம் நடந்தது. அந்த தீர்த்தம்தான். பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுப் போகலாம்னு வந்தோம்’’ என்று அவரையும் காண்பித்து பதில் சொன்னார் செல்லப்பா சாஸ்திரிகள்.

‘‘உனக்கு யோகம்தான்... இங்கே நீ கலசம் வெச்ச விதத்தைப் பெரியவா பாத்திருக்கார். முதல்ல உன் கலசத்தை எடுத்துண்டு வரச் சொன்னார். இந்த தீர்த்தத்தால் அவருக்கு அபிஷேகம் பண்ணணுமாம்’’ என்றார் வேதபுரி மாமா.

செல்லப்பா சாஸ்திரிகளும், டாக்டர் ராஜகோபாலும் பிரமித்துப் போனார்கள்.

அதன்படி மர இருக்கையில் வைக்கப்பட்டிருந்த அத்தனை கலசங்களில் முதல் கலசமாக வெள்ளிக் குடம் எடுத்துச் செல்லப்பட்டது. மகா பெரியவாளுக்கு இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேத பண்டிதர்களும் செல்லப்பா சாஸ்திரிகளும் சேர்ந்து மந்திரங்களைச் சொன்னார்கள்.

அபிஷேகம் செய்யும் பாக்கியம் யாருக்குத் தெரியுமா?

அபிஷேகம் செய்த பின் செல்லப்பாவை ஆசிர்வதித்த பெரியவா, அவருக்கு ஒரு மேருவும் ருத்திராட்சமும் பிரசாதமாகக் கொடுத்தார். தனக்கு இப்படி ஒரு பாக்கியமா என்று பெரியவாளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்து விட்டு வந்தார் செல்லப்பா.

இன்றைக்கும் அந்த மேருவைத் தன் வேலூர் இல்லத்தில் வைத்து பூஜை செய்து வருகிறார் செல்லப்பா சாஸ்திரிகள்!

அடுத்து நாம் பார்க்க இருக்கும் நிகழ்வு ஆச்சார சீலராக விளங்கிய ஒரு பெரியவா பக்தரைப் பற்றி!

இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சில் பேராசிரியராக இருந்தார். எந்தத் துறை தெரியுமா? ஆர்கானிக் அண்ட் பிசிக்கல் கெமிஸ்ட்ரி.

ஐ.ஐ.எஸ். எனப்படும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், உலகிலேயே பெங்களூரில் மட்டும்தான் இருந்தது.

இவரது சொந்த ஊர் பரவாக்கரை. திருவாரூர் மாவட்டம் குடவாசலுக்கு அருகே இருக்கிறது.

சவுந்தர்ராஜனின் தந்தையார் சுந்தரேசன், மகா பெரியவாளின் அத்யந்த பக்தர். இவர் மட்டுமல்ல. இவரது முன்னோர்களும் காஞ்சி காமகோடி பீடத்தின் பக்தர்கள்.

நல்ல படிப்பு படித்தார் சவுந்தர்ராஜன். சிறந்த தேர்ச்சி பெற்றார். நற்படிப்பு படித்தவர்களை விவரம் அறிந்தவர்கள் விட்டு விடுவார்களா? சவுந்தர்ராஜனின் அசாத்திய திறமை குறித்துக் கேள்விப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ‘இவரை வளைத்துப் போடலாம்’ என்று தீர்மானித்தன.

ஆளாளுக்கு சவுந்தர்ராஜனுக்கு லெட்டர் அனுப்பினார்கள். தங்கள் நாட்டுக்கு வரச் சொல்லித்தான். ஆசைப்படலாம். அனைத்தையும் விரும்பலாம். ஆனால், என்ன நடக்க வேண்டுமோ, அதுதானே நடக்கும்?!

தனக்கு வந்த வெளிநாட்டு ஆபர் கடிதங்களை எடுத்துக் கொண்டு மகா பெரியவாளிடம் போனார் சவுந்தர்ராஜன்.

(தொடரும்)

Tags:    

Similar News