செய்திகள்
கோப்புபடம்

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைக்கப்படாத பழங்கரை ஊராட்சி

Published On 2021-10-18 07:57 GMT   |   Update On 2021-10-18 07:57 GMT
திருமுருகன்பூண்டி பேரூராட்சியின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.11.41 கோடி ஆகும்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சி 14.50 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது. 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, மக்கள் தொகை 31 ஆயிரத்து 538 பேர். தற்போதைய மக்கள் தொகை தோராயமாக 36 ஆயிரத்து 826 பேர். இப்பேரூராட்சியின் 2018-2019, 2019-2020 மற்றும், 2020-2021 ஆகிய மூன்றாண்டுகளுக்கான சராசரி ஆண்டு வருமானம் ரூ.11.41 கோடி .

எனவே, திருமுருகன்பூண்டியின் நகர்ப்புற தன்மை, மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில்  நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் வகையில் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைப்படி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அவிநாசி அருகேயுள்ள பழங்கரை ஊராட்சியை திருமுருகன்பூண்டியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு ஒப்புதல் வழங்கி பழங்கரை ஊராட்சி நிர்வாகமும் தீர்மானம் நிறைவேற்றியது.

இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் இணைப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பழங்கரை ஊராட்சி திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைக்கப்படவில்லை.
Tags:    

Similar News