ஆன்மிகம்
ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர்.

தீபத்திருவிழா நாளையுடன் நிறைவு: ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் உலா

Published On 2020-12-02 04:57 GMT   |   Update On 2020-12-02 04:57 GMT
கார்த்திகை தீபத்திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அருணாசலேஸ்வரர் உலா கோவில் பிரகாரத்தில் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 29-ந் தேதி மாலை 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலி்ல் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்ட பிறகு 2-வது நாள் காலையில் அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் கிரிவலம் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக நேற்று காலை அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. அப்போது அருணாசலேஸ்வரருக்கு மகுடம் சூட்டப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

விழா நாட்களில் சாமி வாகனத்தில் உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உலா செல்லும் நிகழ்ச்சி திருவூடல் நிகழ்ச்சியை போன்று பக்தர்கள் சாமியை சுமந்தபடி சென்றனர். இதில் போலீசார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமியும், அம்மனும் ஆடியபடி சென்ற காட்சி பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், இன்று (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News