செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்- சுகாதார துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2021-04-06 13:36 GMT   |   Update On 2021-04-06 13:36 GMT
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என சுகாதார துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

மதுரையிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 60 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மதுரையில் மொத்தம் 22 ஆயிரத்து 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போல், நேற்று 20 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 21 ஆயிரத்து 161 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். மதுரையில் நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 544 ஆக உயர்ந்துள்ளது. படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை உயர்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகள் அமைக்கும் பணி நடக்கிறது.

இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், “2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிற்கு பொதுமக்களுக்கும் இருக்கிறது. பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பரிசோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தால்தான் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மேலும் தொற்று பரவுவதை தடுக்க முடியும். எனவே பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திட சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News