லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை பெற்றோர் எப்படி சொல்லி கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது

Published On 2021-11-24 06:18 GMT   |   Update On 2021-11-24 07:42 GMT
இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
பெற்றோர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.

நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
Tags:    

Similar News