செய்திகள்
மழை

கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்

Published On 2021-09-09 08:06 GMT   |   Update On 2021-09-09 08:06 GMT
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் 13-ந் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலா (நீலகிரி) 16 செ.மீ., பந்தலூர் 8, மேல் கூடலூர் 5, கூடலூர் பஜார் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News