செய்திகள்
வானதி சீனிவாசன்

கிராம சபை கூட்டம் ரத்து செய்தது தேவையற்றது- வானதி சீனிவாசன்

Published On 2020-10-02 07:41 GMT   |   Update On 2020-10-02 07:41 GMT
தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்து இருப்பது தேவையற்றது என்று பா.ஜனதா துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை:

காந்தி ஜெயந்தியையொட்டி இன்று கோவை வைசியாள் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு பா.ஜனதா துணை தலைவர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்து இருப்பது தேவையற்றது. கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவு என்ற நிலையில் சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்தி இருக்கலாம். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக கிராம சபைகளில் தீர்மானம் போட்டால் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

கிராம சபை கூட்டம் நடத்தி இருந்தால் வேளாண் சட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை. பாராளுமன்ற வளாகத்தில் தேச தந்தை காந்திக்கு மலரஞ்சலி ரத்து செய்யப்பட்டது என்பது சபாநாயகரின் முடிவு. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் மலரஞ்சலி நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருக்கலாம்.

நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் விதமாக கோவையில் எல்லா இடங்களிலும் பா.ஜனதா சார்பில் துளசி யாத்திரை நடத்தப்படுகின்றது. மக்கள் பணியில் எப்போதும் இருந்து வருவதாகவும் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்.

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ் பிரிந்தபோது, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரையும் ஒற்றுமையாக இருங்கள் என்றுதான் பிரதமர் மோடி சொன்னார். உட்கார்ந்து பஞ்சாயத்து செய்யவில்லை.

இப்போது இருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. இதில் தலையிட வேண்டும் என்ற ஆர்வம் பா.ஜனதாவுக்கு இல்லை. ஒருவேளை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வேறு ஒருவர் முன்னிலையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தால் அது அவர்களின் முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.






Tags:    

Similar News