செய்திகள்
மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியது - டெல்டா மாவட்டங்களில் கனமழை

Published On 2019-10-17 08:26 GMT   |   Update On 2019-10-17 08:26 GMT
வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர்:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்ததையடுத்து தற்போது வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூரில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் மிதமாக பெய்த மழை பின்னர் கனமழையாக மாறியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். சிறிது நேரம் ஓய்ந்த மழை இரவில் மீண்டும் பெய்ய தொடங்கியது. தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. மாவட்டத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 92.2 மி.மீ. மழை அளவு பதிவானது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது.

இதேபோல் மாவட்டத்தில் மன்னார்குடி, முத்துபேட்டை, நீடாமங்கலம், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நாகையில் நேற்று வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இரவிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கனமழை காரணமாக பாதுகாப்பான இடத்தில் நின்றனர். பின்னர் மழை சிறிது ஓய்ந்த பிறகு வீட்டிற்கு சென்றனர். மாவட்டத்தில் மணல்மேட்டில் அதிகபட்சமாக 67.60 மி.மீ. மழை அளவு பதிவானது.

தஞ்சையில் நேற்று காலையில் மழை பெய்தது. பின்னர் மழை நின்று மீண்டும் மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது.

தஞ்சையை அடுத்த வல்லத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே சென்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வல்லம் பேருந்து நிலையம், கடைவீதி உட்பட பல இடங்களிலும் சாலையில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரி முடிந்து வந்த மாணவர்களும் சிரமப்பட்டனர். வல்லத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள பல குழிகளிலும் மழைநீர் நிரம்பி தெருக்களில் வழிந்தோடியது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு ஆங்காங்கே உள்ள மண் குவியல்களும் தெருக்களில் கரைந்து ஓடியதால் பல தெருக்கள் சேரும் சகதியுமாக காட்சி அளித்தது.

பள்ளி முடிந்து மாணவர்களை இறக்கிவிட வந்த பள்ளி வாகனம் ஒன்று இந்த சேற்றில் சிக்கி கொண்டது. பல பள்ளி வாகனங்கள் தெருக்களில் நுழைய முடியாமல் மாணவர்களை சாலையிலேயே இறக்கி விட்டு சென்றனர். இன்று காலையும் மழை பெய்து வருகிறது. இதேப்போல் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், திருவையாறு, நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

டெல்டா மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீ) வருமாறு:-

திருவாரூர்-92.2
நீடாமங்கலம்-40.6
மணல்மேடு-67.60
நாகை-50.90
சீர்காழி-46.60
வேதாரண்யம்-41.20
அதிராம்பப்டினம்-73.80
மதுக்கூர்-27.40
திருக்காட்டுப்பள்ளி-15.20
தஞ்சை-7
Tags:    

Similar News