தொழில்நுட்பம்
ஹானர்

ஹானர் பிராண்டை விற்க ஹூவாய் முடிவு

Published On 2020-11-17 05:57 GMT   |   Update On 2020-11-17 05:57 GMT
ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிராண்டை விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. 

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களின் தரவுகளை திருடுவது மற்றும் கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையே காரணம் காட்டி அமெரிக்காவில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.



அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஹானர் பிராண்டை விற்கும் முடிவை ஹூவாய் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஹானர் பிராண்டு விற்பனை பற்றிய வர்த்தக விவரங்கள் வெளியாகவில்லை.

தற்சமயம் ஹானர் பிராண்டை மட்டும் விற்பனை செய்துவிட்டு, ஹூவாய் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஹூவாய் கடும் போட்டியை ஏற்படுத்தலாம்.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஹானர் பிராண்டை ஷென்சென் பகுதியை ஒட்டிய தெற்கு நகர அரசாங்கம் அமைத்த நிறுவனம் வாங்க இருப்பதாக தெரிகிறது. ஹூவாய் தனது ஹானர் பிராண்டை இந்திய மதிப்பில் ரூ. 1,13,300 கோடிகளுக்கு விற்பனை செய்யும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News