செய்திகள்
மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசை பிரதமர் மோடி பாராட்டியது அரசியல் ரீதியான கட்டாயம் என நினைக்கிறேன்- மு.க.ஸ்டாலின்

Published On 2020-09-25 01:51 GMT   |   Update On 2020-09-25 01:51 GMT
அ.தி.மு.க. அரசை பிரதமர் மோடி பாராட்டியது அரசியல் ரீதியான கட்டாயம் என்று நினைப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதிலும், தினமும் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோரை குறைப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று, கொரோனாவில் தோற்றுவிட்ட அ.தி.மு.க. அரசுக்கு; மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் பாராட்டுரை வாசித்திருப்பது ஆச்சரியமளிக்கவும் இல்லை; அதிர்ச்சியளிக்கவும் இல்லை; ஏதோ அவருக்கு அரசியல் ரீதியான கட்டாயம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

ஆனால் கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க முடியாமல் மூச்சுத்திணறி “எப்போது கொரோனா குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டு, முதல்-அமைச்சரே கைவிரித்துவிட்ட பிறகு அவர் தலைமையிலான அரசு “சிறப்பாக நடவடிக்கை” எடுத்திருக்கிறது என்று பாராட்டும் நிலையும், நிர்ப்பந்தமும் பிரதமருக்கே ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

மத்தியில் பா.ஜ.க. அரசு எப்படி புள்ளிவிவரங்கள் இல்லாத அரசாக நடக்கிறதோ, அதே மாதிரி தான் அ.தி.மு.க. அரசும் புள்ளிவிவரங்கள் இல்லாத அல்லது புள்ளிவிவரங்களை மறைக்கும் - குறைக்கும் அரசாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனை வாரியாக ஆய்வகங்கள் வாரியாக, கொரோனோ சோதனை விவரங்களை கொடுக்க இன்றுவரை அ.தி.மு.க. அரசால் இயலவில்லை.

கொரோனா பரிசோதனைகள் குறித்து, மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு 15-9-2020 அன்று, மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அளித்த பதிலில், மார்ச் முதல் ஜூன் வரை 10 லட்சத்து 8 ஆயிரத்து 482 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஜூன் 30-ந்தேதி வெளியிடப்பட்ட மாநில அரசின் தினசரி செய்தி குறிப்பின்படி, 11 லட்சத்து 16 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

4 மாதங்களில் மட்டும் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மாநிலங்களவையில் அளித்துள்ள பதிலுக்கும் அ.தி.மு.க. அரசின் தினசரி செய்திக்குறிப்பில் வெளியிடும் கணக்கிற்கும், ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் வேறுபாடு. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாத பரிசோதனைகளில், அ.தி.மு.க. அரசின் பொய் கணக்கு என்ன? இப்படியொரு வேறுபாடு எப்படி ஏற்பட்டது என்பதாவது பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டதா?.

ஆகவே கொரோனாவில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது என்ற பாராட்டு பத்திரத்தை வழங்கியிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை மூலம், ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டு அ.தி.மு.க. அரசின் கொரோனா படுதோல்விகளையும் கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் ஊழல்களையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தமிழக மக்கள் நலன் மீது பிரதமருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கும் என நம்புகிறேன்.

எனவே, கூட்டணி கட்சி என்ற குறுகலான எல்லையை கடந்து வந்து அகன்று விரிந்திருக்கும் ஒரு நாட்டின் பிரதமராக; அ.தி.மு.க. அரசின் கொரோனா தோல்வி - தமிழகத்தின் பொருளாதார மேலாண்மை பின்னடைவு - தொழில் வளர்ச்சி தேக்கம் - வேலையின்மை - ஏழை, எளிய நடுத்தர மக்களின் அதிருப்தி - கடும் நிதி பற்றாக்குறை மற்றும் நெருக்கடி - நிர்வாக சிதைவு என பலமுனை தோல்விகள் அனைத்தையும் அறிந்துகொள்வதுடன்; ஒவ்வொரு பிரிவு குடிமக்களும் எத்தகையை உபத்திரவங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பெரும்பான்மையோர் எதிர்க்கும் வேளாண் மசோதாக்களை ஆதரித்த காரணத்திற்காகவும்; அன்றைய தினம் பிரதமருடனான காணொலி ஆலோசனையின் துவக்கத்திலேயே, விவசாயிகளுக்கு ஆதரவான 3 வேளாண் மசோதாக்களை கொண்டு வந்த உங்களை பாராட்டுகிறேன் என்ற முதல்-அமைச்சர் பழனிசாமியின் “முகமனை” ஒட்டியும்; கொரோனா பேரிடரில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்று பிரதமரை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News