செய்திகள்
கவர்னர் தமிழிசை குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு நரிக்குறவர்களிடம் குறை கேட்டபோது எடுத்த படம்.

நரிக்குறவர் இன மக்களுக்கு குடியிருப்புகள்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

Published On 2021-11-14 03:56 GMT   |   Update On 2021-11-14 03:56 GMT
இருளர், நரிக்குறவர் இன மக்களுக்கு குடியிருப்புகள் கட்ட முயற்சி செய்யப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மற்றும் நரிக்குறவர் வசிக்கும் பகுதிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். மேலும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர்களது குழந்தைகளை தூக்கி வைத்து நலம் விசாரித்தார்.

அப்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு மற்றும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வீடுகள் ஒழுகிக்கொண்டிருப்பதால் தற்காலிக ஏற்பாடாக தார்பாய்கள் தந்துள்ளோம்.

நிரந்தர ஏற்பாடாக குடியிருப்புகள் கட்ட முயற்சி செய்யப்படும். அவர்களது குழந்தைகள் படிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அவர்களை சுயசார்புள்ள மக்களாக மாற்றுவதற்கு கைத்தொழில், சுயதொழில் தொடங்க முயற்சிகள் அளிக்கப்படும்.

அவர்களுக்கு சுத்தமான உடை, மருத்துவ சிகிச்சை, வாழிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாற்றுத்தொழிலுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இங்குள்ள சிறுவர்கள் கேட்டரிங், நர்சிங் போன்ற கல்வி பயின்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News