செய்திகள்
சுப்ரீம் கோர்ட், டெல்லி

அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு

Published On 2019-12-02 10:04 GMT   |   Update On 2019-12-02 10:04 GMT
அயோத்தி நிலம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் 9-11-2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாகவும் அரசிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை அயோத்திக்குட்பட்ட பகுதியில் பெறுவது தொடர்பாகவும் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.



உத்தர பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் கடந்த மாதம் 17-ம் தேதி  இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர்
மவுலானா சையத் அஷ்ஹத் ரஷிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘எங்கள் அமைப்பின் சார்பில் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்.

எங்கள் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என 100 சதவீதம் தெரியும். ஆனால், நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்தாக வேண்டும். இது எங்கள் உரிமை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, அயோத்தி நிலம் தொடர்பாக முன்னர் நடைபெற்ற வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான
எம்.சித்திக் என்பவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அஷ்ஹத் ரஷிதி சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிற்பகல் சார்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மவுலானா சையத் அஷ்ஹத் ரஷிதி, ’பெரும்பான்மையான முஸ்லிம்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய விவகாரமே ஒரு கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறும் சர்ச்சைத்தான். ஆனால், நீதிமன்றம் முன்னர் இதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி விட்டது. இதன் மூலம் நிலத்துக்கான உரிமை தொடர்பான ஆதாரம் நிரூபித்து நிலைநாட்டப்பட்டது. ஆனால், இறுதியாக அளிக்கப்பட்ட தீர்ப்பு இதற்கு நேர் எதிராக உள்ளது.

இந்த தீர்ப்பு தெளிவாக புரிந்துக்கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளதால் நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்கிறோம்’ என்று கூறினார்.

Tags:    

Similar News