ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன்

திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ரத்து

Published On 2020-10-12 08:47 GMT   |   Update On 2020-10-12 08:47 GMT
திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் மற்றும் மலைமேல் குமரர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் என்றென்றும் வற்றாத கங்கைக்கு நிகரான காசி தீர்த்தக்குளம்(சுனை) அமைந்துள்ளது. நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு மலையை கீறி தீர்த்த குளத்தை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. ஆகவே இதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின்கருவறையில் இருந்து முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள வேல் எடுத்துசெல்வது வழக்கம். மேலும் மலையிலுள்ள கங்கை தீர்த்தத்தில் வேலுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

இதனையடுத்து அங்கு கதம்ப சோறு படைத்து சுடச்சுட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இத்தகைய திருவிழா திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இதே விழாவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஏழு கண்மாய் விவசாயிகள் கலந்துகொண்டு மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று முருகப்பெருமானை வழிபடுவார்கள். மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்படும் வேலானது மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் பூ பல்லக்கில் வேல் எடுத்துச்சென்று வீதி உலா வந்து இருப்பிடம் செல்லும். இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இதேபோல வருகிற 16-ந்தேதி மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெற வேண்டும். ஆனால் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசின் நெறிமுறைக்கு உட்பட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News