ஆன்மிகம்
வீட்டில் பூஜை

யோகினி விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் நன்மைகள்

Published On 2021-03-17 05:50 GMT   |   Update On 2021-03-17 05:50 GMT
புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
யோகினி என்றால் யார்? இவர்கள், அம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள் ஆவர்.

முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர்.

ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள் ஆவர்.

இப்படித் தோன்றிய ஒவ்வொரு யோகினியும் எட்டு எட்டு யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி செய்து மகிஷாசுரனின் சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.

இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன.

இந்த யோகினி விரத வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து ஆண்களும் பெண்களும், இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது. இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் தனித்தனியாக கோவில்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News