இந்தியா
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

12 எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு- காந்தி சிலை முன்பு போராட்டம்

Published On 2021-12-01 07:08 GMT   |   Update On 2021-12-01 07:08 GMT
12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. விவாதமின்றி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால் தொடக்க நாளிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதற்கிடையே மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை சீர்குலைத்ததற்காக மேல் சபையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனாவை சேர்ந்த தலா 2 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலா ஒரு எம்.பி.யும் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாதபடி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

12 எம்.பி.க்களின் சஸ்பெண்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று 16 எதிர்க்கட்சிகள் மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அவர் சஸ்பெண்டு உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் நேற்று கிளப்பினார்கள். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரத்தை இன்றும் எதிர்க்கட்சிகள்
பாராளுமன்றத்தில்
  கிளப்பினார்கள். சஸ்பெண்டு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று இரு அவையிலும் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி மேல் சபையில் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் ஒரே கூச்சல், குழப்பம் நிறைந்து காணப்பட்டது.

பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை முன் வைத்து வெளிநடப்பு செய்தனர். 12 எம்.பி.க்களின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.



இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை பிடித்தபடி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதேபோல சஸ்பெண்டு செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News