பெண்கள் மருத்துவம்
பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் ஏற்படும் பிரச்சனைகள்...

பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் ஏற்படும் பிரச்சனைகள்...

Published On 2022-02-03 09:03 GMT   |   Update On 2022-02-03 09:03 GMT
கர்ப்ப காலத்தில் மட்டும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதை தவிர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான, சரிவிகித உணவுப் பழக்கத்தை தொடர வேண்டும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்னைகள் அவர்களின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. எனவே, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்கள் அதிகமுள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. ஊட்டச்சத்தின்மையால் உடல்நலம் மட்டுமின்றி, மனநலமும் பாதிக்கப்படுகிறது. வீட்டிலுள்ள எல்லாரும் சாப்பிட்ட பின் கடைசியாக சாப்பிடுவது, சாப்பாடு தீர்ந்து போனால் காபி, டீ போன்றவற்றை குடித்து, வயிறை நிரப்பிக் கொள்வது என அவர்களின் உணவு தியாகத்தை, பல வீடுகளிலும் பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் மட்டும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதை தவிர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான, சரிவிகித உணவுப் பழக்கத்தை தொடர வேண்டும்.

போதிய விழிப்புணர்வு இல்லாமல், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முற்றிய நிலை வரை, பெரும்பாலான பெண்கள் செல்கின்றனர். மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறியும் சுய பரிசோதனைகளை, வீட்டிலேயே செய்து கொள்ள முடியும் என்றாலும், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது நல்லது. 40 வயதுக்கு மேல், 'மேமோகிராம்' சோதனையை செய்து பார்ப்பதும் அவசியம்.கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய, 'பாப் ஸ்மியர்' சோதனை செய்து கொள்ள வேண்டும். 11 வயது துவங்கி 40 வயது வரை உள்ள பெண்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்; இது மூன்று 'டோஸ்'களாக கொடுக்கப்படுகிறது.

மூன்று டோசின் விலை 6,000 ரூபாய் என்பதால், மேல் தட்டு பெண்களுக்கு மட்டுமே இந்த மருத்துவ பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே, அரசு இந்த தடுப்பூசியை பெண்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.பெண்களில், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களைத் தாக்கும் பிரச்னை, ஆஸ்டியோபொரோசிஸ். விட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் இந்த பாதிப்பால் எலும்புகள் வலு இழந்து போகும். லேசாக அடிபட்டாலும் எலும்புகள் உடையக்கூடும். 40 வயதுக்கு மேலானவர்கள், எலும்பின் அடர்த்தியை கண்டறியும், 'டெக்சா ஸ்கேன்' சோதனையை செய்து கொள்ளலாம். எலும்பு தேய்மானத்தை துவக்கத்திலேயே கண்டறிந்தால் ஊசி மற்றும் மருந்துகள் மூலம் சரி செய்து விட முடியும். பெண்கள் தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனில், முதலில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடலும், உள்ளமும் உறுதியாக இருந்தால் தான் வெற்றி வசப்படும்.
Tags:    

Similar News