செய்திகள்
தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகன்

பிரேசிலில் ருசிகரம் - தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகன்

Published On 2019-12-14 19:37 GMT   |   Update On 2019-12-14 19:37 GMT
பிரேசிலில் ஓட்டுனர் உரிமம் பெற 3 முறை தோல்வி கண்ட தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் உள்ள நோவாமுட்டும் பரானா நகரை சேர்ந்தவர் டோனா மரியா. இந்தப் பெண், ஓட்டுனர் உரிமம் பெற விரும்பினார். இதற்கான சோதனைக்கு 3 முறை சென்ற அவர், ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவினார்.

இதைக்கண்டு வருத்தம் அடைந்த அவரது மகன் ஹெய்ட்டர் (வயது43), அம்மாவுக்கு பதிலாக தானே அவரது வேடத்தில் ஓட்டுனர் உரிம சோதனைக்கு செல்வது என முடிவு செய்தார்.

தாயைப்போன்றே நீண்ட பாவாடை அணிந்தார். ‘சிலிக்கான்’ பிராவும், மேலாடையும் அணிந்தார். காதுகளில் காதணி அணிந்து கொண்டார். ஒரு கைப்பையும் வைத்துக் கொண்டார்.

அவர் தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம பரிசோதனைக்கு சென்றபோது, அங்கிருந்த அதிகாரி ஏற்கனவே தன் வசம் இருந்த அடையாள அட்டையில் இடம் பெற்றிருந்த பெண்ணின் புகைப்படத்துக்கும், சோதனைக்கு வந்திருப்பவரின் தோற்றத்துக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை உணர்ந்து சந்தேகப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரி, ஆள் மாறாட்டம் நடந்திருப்பதை யூகித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து ஹெய்ட்டரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவரது தாய் டோனா மரியாவையும் வரவழைத்து நடந்ததை போலீசார் கூறினர். ஆனால் அவரோ தனக்கு தெரியாமல் மகன் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, ஹெய்ட்டரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்றார். இந்த சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
Tags:    

Similar News