உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே சிறப்பு வாராந்திர ரெயில்

Published On 2022-04-17 08:53 GMT   |   Update On 2022-04-17 08:53 GMT
21-ந் தேதி முதல் இயக்கப்படும் ரெயிலுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
சிறுமுகை: 

கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தென் மாவட்ட மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயணம் எளிதாகும் வகையிலும் நெல்லை& மேட்டுப்பாளையம் இடையே கோடைகால சிறப்பு வாராந்திர ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. 

அதன்படி சிறப்பு ரெயில்  வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, சேரன்மாதேவி. அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி,பொள்ளாச்சி. கோவை வழியாக மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. 

அன்று இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு அதே வழித்தடத்தில் பயணித்து சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த வாராந்திர சிறப்பு ரெயிலில் பயணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு ஒரு நபருக்கு  ரூ.400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி இல்லாதது.

 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதியுடன் நபர் ஒன்றுக்கு ரூபாய் 1100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  3&ம் வகுப்பு குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதியுடன் கூடியதற்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 1525 பயணக் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது 

மேற்படி ரெயில் பயன்பாட்டிற்கு வரும் பொழுது தென்மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், குருநாதசுவாமி கோவில், அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை உடனுறை காசிநாதசுவாமி கோவில் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கும், ஊட்டி, கோத்தகிரி, மூணார், குற்றாலம், மாஞ்சோலை,  நாகமலை உள்ளிட்ட 43 மலைவாசஸ்தலங்களுக்கும் செல்வதற்கு ஆன்மீக பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:    

Similar News