வழிபாடு
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள்

திருக்கோஷ்டியூரில் இன்று மாசி மக தெப்ப உற்சவம்

Published On 2022-02-16 05:20 GMT   |   Update On 2022-02-16 05:20 GMT
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்ப உற்சவ விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 7-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடந்தது.

9-ம் நாளான நேற்று காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

10-ம் திருநாளான இன்று(புதன்கிழமை) காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் பகல் 10.50 முதல் 11.46 மணிக்குள் பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.

முன்னதாக வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேற்று கோவில் தெப்பக்குளத்தில் சுற்றி தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்குதல், போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கும் பணி, உயர் கோபுரம் அமைத்து கூட்டத்தை கண்காணிக்கும் பணிகளை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
Tags:    

Similar News