செய்திகள்
ராஜ்நாத் சிங்கின் காரை இடை மறைத்த நபர்

ஐயா, ஆதார் கார்டுல பேரை மாத்தச் சொல்லுங்க - ராஜ்நாத் சிங் கார் முன் பாய்ந்தவர் கைது

Published On 2019-12-03 12:12 GMT   |   Update On 2019-12-03 12:12 GMT
ஆதார் அட்டையில் தனது பெயரை மாற்றம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என டெல்லியில் இன்று ஒருவர் ராஜ்நாத் சிங் காரை இடைமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதி நாட்டில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் போலீசார் நிறைந்த அப்பகுதியில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் பயணிக்கவும் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வழக்கம்போல பாராளுமன்றத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்புமாக பாதுகாப்பு படையினரின் கார்களும் சென்று கொண்டிருந்தன.

அப்போது பாராளுமன்ற சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென ராஜ்நாத் சிங் சென்ற வாகன வரிசையின் முன் வேகமாக பாய்ந்துச் சென்று இடைமறித்தார். 



இதனால் அதிர்ச்சியடைந்த போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அந்த நபரை உடனடியாக பிடித்து அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தி ராஜ்நாத் சிங்கின் கார் செல்வதற்கு வழிவகை செய்தனர்.

இதையடுத்து, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் உத்தர பிரதேசம் மாநிலம் குஷிஷ்நகரை சேர்ந்த தாஸ் குப்தா என்பதை கண்டுபிடித்தனர். 

ஆதார் கார்டில் உள்ள தனது பெயரில் மாற்றம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே ராஜ்நாத் சிங் சென்ற காரை இடைமறித்ததாக போலீசாரிடம் தாஸ் குப்தா தெரிவித்தார்.

மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பாராளுமன்ற சாலையில் பாதுகாப்பு மந்திரி சென்ற காரை தனி நபர் வழிமறித்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News